இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி, குகி ஆகிய 2 சமூகத்தினருக்கு இடையே இனக்கலவரம் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதுவரை இந்த கலவரத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர்.
கலவரத்தால் ஆட்சியில் இருந்த பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை ஏற்படுவதும் பின்னர் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து நிலைமை சரிசெய்யப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு, காக்சிங், காங்போக்பி, தெங்னூபால் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.