புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினமா செய்த நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்படி, துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால், தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த, மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு மற்றும் எல்.ஜே.பி. (ராம் விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கும் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. நாடாளுமன்ற வாரிய கூட்டம் நாளை கூடுகிறது.