புதுடெல்லி,
தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி சோ ஹியூன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் டெல்லியில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.
அப்போது அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரத்தில், நாங்கள் மிக திடத்துடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பயங்கரவாத தாக்குதல் எதுவாக இருப்பினும் அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதுணையாக நாங்கள் நிற்போம் என்று கூறினார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தி தகர்த்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இரு நாடுகளை சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாக போர்நிறுத்தம் ஏற்பட்டது.