புதுடெல்லி,
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல. கணேசன் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மாலை 6.23 மணியளவில் காலமானார். அவருக்கு கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்தவரான இல. கணேசன் 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தமிழகத்தில் அக்கட்சியின் அடித்தள விரிவாக்கத்திற்கு உதவினார். அமைப்பு செயலாளர், தேசிய செயலாளர், அகில இந்திய துணை தலைவர் மற்றும் தமிழக தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
2021-ம் ஆண்டு ஆகஸ்டில் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரை அந்த பதவியை வகித்த அனுபவம் கொண்டவர். 2022 ஜூலை முதல் 2022 நவம்பர் வரை, மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி நாகாலாந்து கவர்னராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய மறைவை தொடர்ந்து, நாகாலாந்து கவர்னர் பதவி காலியானது. இதனால், மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.