வரவிருக்கும் ஆசிய கோப்பை 2025 தொடரில் யார் யார் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் வெளிப்படுத்திய அபாரமான ஃபார்ம் காரணமாக, மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவரது வருகை அணி தேர்வில் ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. அணிக்குத் தேவைப்படும் ஒரு வீரரை எடுப்பதா அல்லது வெற்றிகரமான கூட்டணியை கலைப்பதா? என்ற இக்கட்டான நிலையில் தேர்வுக்குழு உள்ளது.
ஷ்ரேயஸ் ஐயரின் வருகை
ஷ்ரேயஸ் ஐயரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர தேர்வாளர்கள் விரும்புவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. ஐபிஎல் 2025 தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியை ஒரு கேப்டனாக இறுதி போட்டி வரை அழைத்து சென்றதோடு, ஒரு பேட்ஸ்மேனாகவும் மிக சிறப்பாகச் செயல்பட்டார். அதற்கு முன்பு துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. துபாய் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்கள் பலர் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளச் சிரமப்படும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் சுழற்பந்தை மிக திறமையாகக் கையாள கூடியவர். இது அணிக்கு ஒரு பெரும் பலமாக அமையும். பாகிஸ்தான் போன்ற உயர் அழுத்த போட்டிகளில், அழுத்தத்தை சிறப்பாகக் கையாளக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர் ஷ்ரேயஸ். அவரது மனப்பான்மையும், அனுபவமும் அணிக்கு மிகவும் தேவை.
தேர்வாளர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
ஷ்ரேயஸ் ஐயரின் வருகை அணிக்கு பலம் சேர்த்தாலும், அது மற்றொரு புறம் அணி தேர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரேயஸ் ஐயரை அணியில் சேர்த்தால், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு வீரரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயரின் வருகை சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் இடங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒருவேளை ஷ்ரேயஸ் ஐயர் 3 ஆம் இடத்தில் களமிறங்கினால், சுப்மன் கில் அல்லது சஞ்சு சாம்சனின் நிலை என்னவாகும்? அவர் 5 ஆம் இடத்தில் களமிறங்கினால், திலக் வர்மாவின் நிலை என்ன? ஒரே அணியில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் விளையாட வைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற மூத்த வீரர்களை, அணியில் தேர்ந்தெடுத்த பிறகு பெஞ்சில் அமர வைக்க முடியாது. அவர்கள் இருவரும் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டிய தகுதியுடையவர்கள்.
தற்போதைய நிலவரம்
சமீபத்திய தகவல்களின்படி, இந்திய அணி நிர்வாகம் தற்போதைய வெற்றி கூட்டணியை மாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் ஆசிய கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த முடிவு, பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. இந்திய அணியின் இறுதி பட்டியல், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் தேர்வு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும். ஷ்ரேயஸ் ஐயரின் தனிப்பட்ட திறமைக்கு தேர்வாளர்கள் மதிப்பளிப்பார்களா அல்லது அணியின் தற்போதைய நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark