வாஷிங்டன்
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போதும் அதுபோல் நடக்காமல் இருக்க ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிரம்ப்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியை வரவேற்று அழைத்து சென்றார் டிரம்ப்.
அதனை தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது:-
இங்கு வருகை தந்த ஜெலென்ஸிக்கு நன்றி . போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார்.. இது வரை 6 பேர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். உலக நாடுகள் இந்த போரால் தளர்ந்து போய்விட்டன. இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்யா- உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்.
போரில் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர், உக்ரைன் மக்களை நேசிக்கிறோம். இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது.
புதினுடன் பேசினேன், இந்த சந்திப்புக்கு பிறகும் புதினுடன் பேச உள்ளேன். புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம் . உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்றார். இதனையடுத்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷியா போரை நிறுத்த வேண்டும்,போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நன்றி.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவி தேவை, இன்று கூட ரஷியா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாதுகாப்பை உறுதி செய்யாமல் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது, யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து 7 ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.