கீவ்
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.
அதனை பொருட்படுத்தாததால் உக்ரைன் மீது 2022-ல் ரஷியா போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப தர முடியாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். இதற்கு உக்ரைன் சம்மதிக்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி நேற்று ஒரேநாளில் உக்ரைன் மீது 574 டிரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ரஷியா அனுப்பியது.
போர் தொடங்கிய பிறகு இதுவரை நடத்தப்பட்ட மிகப்-பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல கட்டிடங்கள், தொழிற்சாலைகள் சேதமடைந்தன. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.