நெல்லை: “தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெற வைத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசியது: “ஒரு போரை படை தளபதிகள் முன்னின்று நடத்துவதைப் போல் தேர்தலில் பூத் முகவர்கள் முன்னின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் உங்களுக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழகத்தில் 7 இடங்களில் இதுபோன்ற பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி குமரி மண்டலத்துக்கான மாநாடு இங்கே நடைபெறுகிறது.
கடந்த 12 ஆண்டுகளாவே பிரதமர் மோடி நமக்காக உழைத்து வருகிறார். அடுத்த 8 மாத காலம் அவருக்காக நாம் உழைக்க வேண்டும். அடுத்த 8 மாத காலம் நமக்கு மிக முக்கியமான காலமாகும். வரக்கூடிய தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெற வைத்து, அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது. மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதனால் ஏராளமான பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, வரக்கூடிய 8 மாதம் கடுமையாக உழைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
புதிய கல்வி கொள்கை என்று தமிழக முதல்வருக்கு எதைப்பார்த்தாலும் பயம். ஊழல் அமைச்சர்கள் பதவியில் இருக்க முடியாது என்பதற்கான 130-வது சட்ட திருத்தத்தை பார்த்தும் பயப்படுகிறார். அவரை நிரந்தரமாக பயமின்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நிறைய பெருமைகளை கொண்டு வந்திருக்கிறார். இப்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக உயர்த்தி இருக்கிறார். தொடர்ந்து தமிழகத்தின் பெருமைக்காகவும், தமிழக வளர்ச்சிக்காக வும் பாடுபடுகிறார்.
மத்திய அரசின் சாதனைகளையும் திமுகவின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்த மாநாடு வெற்றி மாநாடாக தொடங்கி இருக்கிறது” என்று அண்ணாமலை பேசினார்.