தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
அண்ணாமலை: 2026 தேர்தலில் தவெக-திமுக இடையே தான் போட்டி என்று விஜய் பேசியுள்ளார். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களின் எதிரி திமுக என்று சொல்வது, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. மற்றவர்களின் பலவீனத்தை மட்டும்தான் விஜய் பேசியிருக்கிறார். தனது பலத்தைப் பற்றி அவர் பேசவில்லை.
விஜய் மாநாடு நடத்தலாம். ஆனால், வாக்களிக்கும்போது இவர் 5 ஆண்டுகள் அரசியலில் தாக்கு பிடிப்பாரா? என்று மக்கள் யோசிப்பார்கள். முதல்வரை ‘அங்கிள்’ என பேசியது சரியல்ல. பொது இடத்தில் பக்குவமாகப் பேச வேண்டும். தமிழக மக்கள் பாஜகவை சக்திவாய்ந்த கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 சதவீதம் வாக்களித்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்: உலக அளவில் பிரதமர் மோடி புகழடைந்து கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் மிஸ்டர் பி.எம். என்று கூப்பிட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். எழுதிக் கொடுத்தபடி அங்கிள், மிஸ்டர் பி.எம். என்று விஜய் வசனம் பேசியுள்ளார். அவர், அரசியல் ஞானம் பெறவில்லை என்பதற்கு, கச்சத்தீவை பற்றி பேசியதே உதாரணம். ஒரு கொடியைக்கூட ஒழுங்காக நட முடியாதவர்கள், மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள்?
ஹெச்.ராஜா: பாஜக பற்றி தேவையின்றி விஜய் பேசியுள்ளார். விஜய் முதலில் தமிழக அரசியலை படிக்க வேண்டும். தமிழக ரசிகர்களைப் பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர, தமிழகத்துக்கு விஜய் என்ன செய்துள்ளார்? கொள்கை ரீதியாக பாஜக எதிரி என்கிறார், அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது? பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன்.
நடிகர் சரத்குமார்: நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். குறிப்பாக, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால், அரசியல் பாடம் கற்றுக்கொண்டு, என்ன பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு, கொள்கை ரீதியாகப் பேச வேண்டும். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று கூறும் அளவுக்கு விஜய் வளர்ந்து விடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.