இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜகவின் முன்னாள் எம்பி மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் பயிற்சியாளராக உள்ளார். வேறு எந்த ஒரு பயிற்சியாளருக்கும் கிடைக்காத சலுகை இவருக்கு கிடைத்துள்ளது. ஒரு வீரராக, அணியின் கேப்டனாக, அணியின் ஆலோசகராக, எம்பி ஆக மற்றும் தற்போது தலைமை பயிற்சியாளராக பல சாதனைகளையும், மைல்கற்களையும் செய்துள்ளார் கம்பீர்.
பயிற்சியாளராக கம்பீர்
கடந்த ஜூலை 2024-ல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார் கவுதம் கம்பீர். அதற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணியில் ஆலோசகராக பணி புரிந்தார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு, அந்த அணி இரண்டு முறையும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார் கம்பீர். பின்பு 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு, தனது பழைய அணியான கொல்கத்தாவுடன் மீண்டும் ஆலோசகராக இணைந்தார். அவரது வழிகாட்டுதலில், 10 வருடங்களுக்கு பிறகு, கொல்கத்தா அணி தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. கம்பீரின் தலைமையில் இந்திய அணி 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்றது.
கம்பீரின் சாதனைகள்
கம்பீர் இந்தியாவிற்காக மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5238 ரன்களும், டி20யில் 932 ரன்களும் அடித்துள்ளார். 2007 டி20 உலக கோப்பை இறுதி போட்டியிலும், 2011 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியிலும், மிக முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடி, இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அரசியில் பயணம்
2018ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கம்பீர் பல்வேறு துறைகளில் தனது பயணத்தை தொடர்ந்தார். 2019 முதல் 2024 வரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், கிழக்கு டெல்லி தொகுதியின் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், தொலைக்காட்சி விவாதங்களில் கிரிக்கெட் நிபுணராகவும் செயல்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக, பிசிசிஐ-யிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளமாக பெறுகிறார் கம்பீர். இது தவிர, ஊக்கத்தொகைகள், பயண படிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது தினமும் ரூ.21,000 படிகளும் வழங்கப்படுகின்றன. 2024-25 ஆம் ஆண்டின் கணக்குப்படி கௌதம் கம்பீரின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ.265 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கம்பீரின் சொத்துக்கள்
டெல்லியில் பல சொத்துக்களை கொண்டுள்ளார் கம்பீர். ராஜேந்திர நகரில் ரூ.15 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடு உள்ளது. இது தவிர உயர் மட்ட பிரமுகர்களை சந்திப்பதற்கான மற்றொரு வீடும் உள்ளது. நொய்டாவில் உள்ள ஜேபி விஷ் டவுனில் ரூ.4 கோடி மதிப்பிலான நிலமும் உள்ளது. கம்பீரிடம் மாருதி சுசுகி SX4, டொயோட்டா கொரோலா, மஹிந்திரா பொலிரோ ஸ்டிங்கர், ஆடி Q5 மற்றும் BMW 530D போன்ற கார்கள் உள்ளது. Redcliffe Labs, CoinDCX, Real11 மற்றும் Pinnacle Speciality Vehicles போன்ற நிறுவனங்களுடன் பிராண்ட் ஒப்பந்தம் செய்துள்ளார் கம்பீர். இதன் மூலமும் வருமானம் வருகிறது.
About the Author
RK Spark