தர்மஸ்தலா பாலியல் கொலை வழக்கில் புகார் அளித்தவர் கைது – பின்னணி என்ன?

பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அந்த சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்த‌தாகவும் முன்னாள் தூய்மை பணியாளர் போலீஸில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கர்நாடக அரசு இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழுவை சேர்ந்த போலீஸார் நேத்ராவதி ஆற்றங்கரையில் 13 இடங்களில் தோண்டி, சோதனை நடத்தினர். அதில் 3 இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் மண்டை ஓடு கிடைக்கவில்லை.

கோயில் நிர்வாகி புகார்: இதையடுத்து தர்மஸ்தலா கோயில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே, ‘‘தர்மஸ்தலா கோயிலின் மாண்பை கெடுக்கும் வகையில் பொய் புகார் அளித்துள்ளார்’’ என குற்றம்சாட்டினார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, ‘‘இதன் பின்னணியில் தமிழக‌ காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இருக்கிறார்” என குற்றம்சாட்டினார்.

பாஜக அமளி: இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலரும், எம்எல்ஏக்கள் சிலரும் கூட தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிறப்பு விசாரணைக் குழு போலீஸார் புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரிடம் விசாரணை ந‌டத்தினர். அப்போது அவர் தவறான தகவல்களை கூறி, போலீஸாரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மற்றொரு புகார்தாரரும் பல்டி: இந்த விவகாரத்தில் மற்றொரு புகார்தாரரான சுஜாதா பட் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தர்மஸ்தலாவில் என் மகள் அனன்யா பட் கொல்லப்பட்டதாக புகார் கூறினேன். அவர் எனது மகள் அல்ல. என் நண்பரின் மகள். நான் பொய் புகார் அளித்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். இந்நிலையில் தர்மஸ்தலா பாலியல் கொலை விவகாரத்தில் புகார் அளித்த நபர் மீதே நடவடிக்கை எடுத்திருப்பதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.