மும்பை,
உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா ராஜ்ய சிக்ஷக் சேனாவின் நிகழ்ச்சியில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வாக்கு திருட்டு நடப்பதை தடுக்கவேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணியால் வெற்றி பெற முடியாது. அதிலும் நிச்சயமாக மராட்டியத்தில் வெற்றி பெற முடியாது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவினர் வாக்குகளை எவ்வாறு திருடினார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். அவர்களின் முக்காடுகளை கிழித்துவிட்டார். யானைகள், நாய்கள் மற்றும் புறாக்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள்.
மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் பஹல்காமில் நமது மக்கள் கொல்லப்படும்போதும்,நமது வீரர்கள் கொல்லப்படும்போதும், அந்த மனிதநேயம் எங்கே போனது? நமது ராணுவ மந்திரி ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக கலக்க முடியாது என்று கூறுகிறார். அப்படி இருக்கும்போது பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி விளையாட நீங்கள் எப்படி அனுமதி வழங்குகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டி 14-ந் தேதி துபாயில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.