சித்தார்த், சரத்குமார், தேவயாணி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவான ‘3BHK’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்திருந்தார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். திரையரங்கத்தில் வெளியான சமயத்திலும், ஓ.டி.டி-யில் வெளியான சமயத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
தற்போது ரெடிட் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் பதில் தந்திருக்கிறார்.
அவருக்கு பிடித்த உணவு, சமீபத்தில் பிடித்த திரைப்படம் என ரசிகரின் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.
அப்படி பிடித்த திரைப்படம் தொடர்பான கேள்விக்கு சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். அப்படி சமீபத்தில் எனக்கு ‘3BHK’ திரைப்படமும் ‘Ata Thambyacha Naay’ என்ற மாராத்திய திரைப்படமும் பிடித்திருந்தது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தன்னுடைய திரைப்படத்தை சச்சின் பார்த்து பாராட்டியிருப்பது குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில் அவர், “ரொம்பவே நன்றி சச்சின் சார். நீங்கள்தான் என்னுடைய குழந்தை பருவத்தின் ஹீரோ. இந்த வார்த்தை எங்களுக்கு மிகப்பெரியது.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.