ரஷியா – உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் – அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்

இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார்.

இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

அதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், 27-ந்தேதியில் இருந்து அமெரிக்காவில் நுழையும் இந்திய பொருட்களுக்கும், சேமிப்பு கிடங்கில் இருந்து பயன்பாட்டுக்காக வெளியேறும் இந்திய பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதே சமயத்தில், 27-ந்தேதிக்கு முன்பே கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களுக்கும், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி வதிப்பு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மொத்தம் 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி வர்த்தகர்களும் தங்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என்று கவலையில் உள்ளனர். இருப்பினும், அமெரிக்காவால் ஏற்படும் பாதிப்பை போக்க 40 நாடுகளுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷியா, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளுடன் தூதரகம் மூலமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேற்கண்ட நாடுகள் மொத்தம் 59 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. எனவே, அந்நாடுகள் ஜவுளி பொருட்களுக்கு நல்ல வாய்ப்புள்ள சந்தைகளாக கருதப்படுகின்றன.

தரமான, நிலையான, புதுமையான ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெயரை முன்னிறுத்தி, அந்நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுபோல், ரசாயனங்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுடன் மத்திய வர்த்தக அமைச்சகம் இந்த வாரம் தொடர்ச்சியாக சந்திப்புகளை நடத்துகிறது. அமெரிக்க வரிவிதிப்பில் இருந்து இத்துறைகளை பாதுகாக்க புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கில் இந்த 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு வெறும் 25 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும்.

இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்ற காரணத்தால் உக்ரைன் – ரஷியா இடையிலான போரில் ரஷிய தரப்புக்கு மறைமுக உதவி கிடைக்கிறது. அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷியா தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. இதன் மூலம் ரஷிய யுத்தம் செய்ய இந்தியா உதவுகிறது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அது எப்படி என்றால் இந்தியா தள்ளுபடி விலையில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது.

அதன் மூலம் ரஷியா நிதி ஆதாயம் அடைகிறது. அந்த நிதியை கொண்டு படை பலத்தை ரஷியா உறுதி செய்கிறது. அதோடு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. அதற்கான நிதி ஆதாரம் அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிதான். அதனால் தான் இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது என்கிறேன். நாங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம். அது எங்கள் உரிமை என சொல்கிறது இந்தியா. அதே நேரத்தில் அதிக வரிகள் கூடாது என சொல்கிறது. அதுதான் என்னை இம்சிக்கிறது.

ரஷியா – உக்ரைன் போர், ‘மோடியின் போர்’.. ஏனென்றால் அமைதிக்கான பாதை புதுடெல்லி வழியாக செல்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.