பாட்னா,
பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரில் யாத்திரை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 16-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த யாத்திரை பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேற்று முன்தினம் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பேரணியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தங்கள் கைகளில் வைத்திருந்த கட்சி கொடியை கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.