இஸ்லமாபாத்,
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்க முற்பட்டது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. மூன்று நாட்களுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் மேலாக நீடித்த மோதல் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது.
சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட திட்டமிட்ட இந்தியா, அந்நாட்டுக்கு எதிரான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், அரண்டு போயுள்ள பாகிஸ்தான், இந்தியாவிடம் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருப்பதாக கூறி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் இன்று பேசுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.