டோக்கியோ,
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இதையடுத்து இந்தியா-ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று இரவு ஜப்பான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் 2-வது நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலில் ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
சென்டாய் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உலக புகழ்பெற்ற புல்லட் ரெயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. அந்த பயிற்சி மையத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான பயிற்சியை இந்தியர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன் பிறகு மற்றொரு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய உணவு விருந்து அளித்தார். அத்துடன் பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் மற்றும் அதிகாரிகளிடம் விடை பெற்ற பிரதமர் மோடி இன்று பிற்பகல் டோக்கியோவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். சீனாவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.2018-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.