புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் சவால்கள் நிறைந்தவைகளாக உள்ளன. இந்நேரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்.
இந்திய கடற்படையில் சில நாட்களுக்கு முன் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதய்கிரி போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. புதிய போர்க்கப்பல்கள் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. இது நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை வலுப்படுத்தும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும், பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதூப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை உலக நாடுகள் பார்த்தன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் உட்பட அனைத்து ஆயுதங்களும் துல்லிய தாக்குதல் நடத்தின. தொலைநோக்கு, நீண்ட கால தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றியடைய முடியாது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சில நாள் போராக இருக்கலாம். ஆனால், இதில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி, பாகிஸ்தானுக்கு கிடைத்த தோல்விக்கு பின்னால், பல ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தயார் நிலை ஆகியவை உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.700 கோடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.24,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்த அணுகுமுறை வரும் காலங்களில் நாட்டை பாதுகாப்பாகவும், உலக நாடுகள் இடையே முன்னணியிலும் வைத்திருக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.