இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் ஆசிய கோப்பை 2025. இந்நிலையில் இந்த தொடரின் போட்டி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள், இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும் வகையில் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
மாற்றத்திற்கான காரணம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான வெப்பத்தை தவிர்ப்பதற்காகவும், தெற்காசிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரைம் டைம் எனப்படும் முதன்மை நேரத்தில் போட்டிகளை கொண்டு சேர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பாளர்கள் மற்றும் மைதான கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து, ரசிகர்களுக்கு மாலை நேரங்களில் இதமான சூழலில் போட்டிகளை காணும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, தொடரில் உள்ள 19 போட்டிகளில் 18 போட்டிகள் வளைகுடா நேரப்படி மாலை 6:30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும்.
ஒரே ஒரு பகல் ஆட்டம்
இந்த அட்டவணையில் உள்ள ஒரே விதிவிலக்கு, செப்டம்பர் 15 திங்கட்கிழமை அன்று அபுதாபியில் உள்ள சைய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியாகும். இந்த போட்டி மட்டும் வளைகுடா நேரப்படி மாலை 4:00 மணிக்கு இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு தொடங்கும். இதுவே தொடரின் ஒரே பகல் ஆட்டமாகும், மற்ற அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு A: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்
குழு B: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்
ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில், தகுதி பெற்ற நான்கு அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28 அன்று துபாயில் நடைபெறும் இறுதி போட்டிக்குத் தகுதி பெறும். இறுதி போட்டிக்கு செப்டம்பர் 29 அன்று ஒரு மாற்று நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான குழுநிலை போட்டி, செப்டம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்குகிறது. குழுநிலை ஆட்டங்களுக்குப் பிறகு சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதிபோட்டி நடைபெறும்.
ஆசிய கோப்பை 2025 போட்டி அட்டவணை
– செப். 9 – ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் – அபுதாபி – இரவு 8:00
– செப். 10 – இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் – துபாய் – இரவு 8:00
– செப். 11 – வங்கதேசம் vs ஹாங்காங் – அபுதாபி – இரவு 8:00
– செப். 12 – பாகிஸ்தான் vs ஓமன் – துபாய் – இரவு 8:00
– செப். 13 – வங்கதேசம் vs இலங்கை – அபுதாபி – இரவு 8:00
– செப். 14 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் – இரவு 8:00
– செப். 15 – ஐக்கிய அரபு அமீரகம் vs ஓமன் – அபுதாபி – மாலை 5:30
– செப். 15 – இலங்கை vs ஹாங்காங் – துபாய் – இரவு 8:00
– செப். 16 – வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – அபுதாபி – இரவு 8:00
– செப். 17 – பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம் – துபாய் – இரவு 8:00
– செப். 18 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் – அபுதாபி – இரவு 8:00
– செப். 19 – இந்தியா vs ஓமன் – அபுதாபி – இரவு 8:00
About the Author
RK Spark