MS Dhoni Team India Mentor: 2026 டி20 உலகக் கோப்பை இன்னும் 5-6 மாதங்களுக்குள் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே இந்திய அணியின் தற்போதைய அடுத்த டார்கெட் எனலாம்.
Add Zee News as a Preferred Source
Team India: சூர்யகுமார் – கம்பீர் காம்பினேஷன்
சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி உலகக் கோப்பையை தக்கவைக்க தற்போது இருந்தே தயாராகி வருகிறது. குறிப்பாக, ஆசிய கோப்பை தொடரும் டி20ஐ வடிவில் நடைபெற இருப்பதால், பிளேயிங் லெவன் காம்பினேஷனை இப்போதே கண்டறிய இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தமும் நிறைவடைந்தது. இதனால், அதற்கு பின் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக உள்ளே வந்தார். சூர்யகுமார் யாதவிடம் கேப்டன்ஸி ஒப்படைக்கப்பட்டது.
Team India: 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் சுப்மான் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதற்கு பின், சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2024 ஜூலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அடுத்து 2024 அக்டோபரில் இந்தியாவில் நடைபெற்ற வங்கதேச அணி உடனான டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது.
அடுத்த மாதமே தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் நடந்த டி20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் வென்றது. அதாவது, டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் வெறும் டி20ஐ போட்டிகளில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது, 17 போட்டிகளில் வென்றுள்ளது. அனைத்து டி20 தொடர்களையும் வென்றுள்ளது.
Team India: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்…
2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20ஐ போட்டிகளை விளையாடுகிறது. டிசம்பரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அடுத்து ஜனவரியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணியுடன் 5 டி20ஐ போட்டி கொண்ட தொடரை இந்திய அணி விளையாட இருக்கிறது. இவற்றுக்கு முன் ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா குறைந்தபட்சம் 6-7 போட்டிகளை விளையாடும் எனலாம். ஏறத்தாழ டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் 22-23 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளின் மூலமே இந்தியா உலகக் கோப்பைக்கு தயாராகும் எனலாம்.
MS Dhoni: தோனிக்கு பிசிசிஐ அழைப்பா?
இந்திய அணி மூன்று பார்மட்டிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மூன்று பார்மட்டுக்கான இந்திய அணியின் ஆலோசகர் பொறுப்புக்கு பிசிசிஐ தோனியை அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை, தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 2027 ஐசிசி உலகக் கோப்பை ஆகியவற்றை மனதில் வைத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார். அப்போது தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, கேப்டனாக விராட் கோலி ஆகியோர் செயல்பட்டனர். இருப்பினும் அந்த தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது நினைவுக்கூரத்தக்கது. ஆனாலும், தோனிக்கு தற்போது இரண்டாவது முறையாக ஆலோசகர் பதவிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
MS Dhoni: ‘இது வதந்தி தான்’
தற்போது கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. டி20ஐ மற்றும் டெஸ்ட் அரங்கில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், புஜாரா போன்ற நட்சத்திர மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களின் இடத்தை நிரப்ப வேண்டிய ஒட்டுமொத்த பொறுப்பும் கம்பீரின் கைகளில் இருக்கிறது எனலாம். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலகக் கோப்பை வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தோனி ஒருவேளை ஆலோசகராக வந்தால் அது அணிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்காது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். கம்பீர் இருக்கும்போது தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்காது என்றும் இது வெறும் வதந்தி என்றும்தான் பலரும் கருதுகின்றனர்.
Team India: ‘தோனி இப்போது வேண்டாம்’
கம்பீர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் சொதப்பினாலும் சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது பாராட்டத்தக்கது. காரணம் குறைவான அனுபவ வீரர்களுடன் சென்று தொடரை சமன் செய்தது பலரும் எதிர்பார்க்காத ஒன்று எனலாம். ஆனால், கம்பீர் வந்த பிறகு இந்திய அணி டி20ஐ மற்றும் ஓடிஐ போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் கூட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருந்தது. எனவே, தோனியை ஆலோசகராக அழைப்பது தற்சமயத்தில் சரியான முடிவாக இருக்காது