இப்போ ராகுல் டிராவிட்… அடுத்து சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் அணிக்கு பெரிய சிக்கல்!

Rahul Dravid, Rajasthan Royals: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். அணிக்குள் பெரிய பொறுப்பை அவருக்கு கொடுத்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

இதற்கு முக்கிய காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ராகுல் டிராவிட் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால்தான் அவர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், கடந்த ஐபிஎல் 2025 சீசனில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரராக இருந்தார், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் அணியின் இயக்குநராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தார்.

இப்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நிர்வாகத்தில் பெரிய பொறுப்பை வழங்கியதாகவும், அதை ஏற்க மறுத்த அவர் விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் டிராவிட்டுக்கு என்ன பொறுப்பை பரிந்துரைத்தார்கள் என அதில் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில், அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட பொறுப்பின் மூலம் அணிக்குள் அவரது அதிகார வரம்பு குறையுமா என்பதும் தெளிப்படுத்தப்படவில்லை. 

இதுகுறித்து ஒரு ஐபிஎல் அணியுடன் பயிற்சியாளர் குழுவில் இருந்த இந்திய பயிற்சியாளர் ஒருவர் பிடிஐ ஊடகத்தில் பேசுகையில், “நீங்கள் ஐபிஎல் அணிகளுடன் வேலைப்பார்த்திருந்தால் இந்த ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைமை பயிற்சியாளருக்கு பெரிய பொறுப்பை வழங்கினால் அது ஒரு தண்டனையாகவே இருக்கிறது. அதாவது அணியை கட்டமைக்கும் செயல்பாட்டில் உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற நிலைக்கு கொண்டுவரும்” என்றார்.

இதுதான் ராகுல் டிராவிட் விஷயத்திலும் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சஞ்சு சாம்சன் அணியில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்தச் சூழலில் ராகுல் டிராவிட்டும் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸை பெரிய சிக்கலுக்குள் உள்ளாக்கியுள்ளது. முன்னரே, கடந்த சீசனில் ராகுல் டிராவிட்டுக்கும், சஞ்சு சாம்சனுக்கும் பிரச்னைகள் இருந்ததாகவும் அதனாலேயே சஞ்சு சாம்சன் வெளியேற இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ராகுல் டிராவிட் விலகியிருப்பதால் சஞ்சு சாம்சன் இருப்பாரா விலகுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ஆனால், சஞ்சுவும் கேப்டன்ஸி மாற்றம் காரணமாகவே விலகுவதாக கூறப்பட்டது. தற்போது ராகுல் டிராவிட் விலகினாலும் கூட சஞ்சு சாம்சன் விலகுவதற்கான வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. சஞ்சு சாம்சனுக்கு காயம் காரணமாக ரியான் பராக் பல போட்டிகளில் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். தற்போது ரியான் பராக் மட்டுமின்றி யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டன்ஸி ரேஸில் இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் பெரிய சிக்கலில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.