மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: “எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை

மும்பை: “இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்ற முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என மகாராஷ்டிர அரசுக்கு மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மும்பை வந்துள்ள ஆதரவாளர்கள் ஆசாத் மைதானம் மட்டுமின்றி, சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (செப். 1) விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு, போராட்டம் அமைதியாக இல்லை என்றும் அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “நாளை (செப்.2) நண்பகலுக்குள் வீதிகளை காலி செய்து, இயல்புநிலையை மீட்டெடுக்க மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜாரங்கிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நீதிமன்றம் வாய்ப்பு வழங்குகிறது. ஜாரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தை நடத்தவில்லை. எனவே, மகாராஷ்டிர அரசு சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று வரும் முமு்பை ஆசாத் மைதானத்தை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி மும்பை போலீஸார் மனோஜ் ஜாரங்கி மற்றம் அவரது குழுவினருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும், போராட்டம் தொடங்குவதற்கு முன் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ஆசாத் மைதான காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் ஜாரங்கி, “மகாராஷ்டிர அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அதற்கு மாறாக நீங்கள் செயல்பட்டால் நான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை. எங்களை கைது செய்யவோ, வெளியேற்றவோ முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

உயர் நீதிமன்றம் ஏழை மராத்தாக்களுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். 4,000 முதல் 5,000 போராட்டக்காரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் நாங்கள் தங்கிக் கொள்ள எங்களுக்கு வீடுகளைக் கொடுங்கள். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்குகிறார். அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டி இருக்கும்” என எச்சரித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.