லண்டன்,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், செதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு பின் 3-வது பேட்டிங் வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 24-ம் தேதி அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.
அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். இடையில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) வெல்ல முக்கிய பங்காற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார். அதுபோக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போதைய நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், ஜோ ரூட் ஆகியோர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய தயங்குகிறார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார். ஆனால் புஜாரா அதனை சிறப்பாக செய்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ புஜாரா ஒரு உண்மையான 3-வது வரிசை பேட்ஸ்மேன். அவர் ராகுல் டிராவிட் என்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவரிடமிருந்து பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 3 இடத்தில் அசத்தக்கூடிய வீரர்கள் சற்று குறைவாகவே உள்ளனர். இங்கிலாந்து அணியில் கூட, ஜோ ரூட் அதை செய்ய விரும்பவில்லை. இந்தியாவில் சுப்மன் கில், கேப்டன்ஷிப் பெற்ற பிறகு, நான்காவது இடத்தில் பேட் செய்ய விரும்புகிறார்.
நமது காலத்தில் 3-வது வரிசை பேட்ஸ்மேன்கள் சிறந்த வீரர்களாக இருந்தனர். அது விவ் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் அல்லது ராகுல் டிராவிட் ஆக இருக்கட்டும். இது எளிதான இடமல்ல, ஆனால் புஜாரா அதை யாரையும் விட சிறப்பாக செய்தார். மற்றொரு பழைய பாணி பேட்ஸ்மேன் இப்போது இல்லை. உயிரை வைத்து விளையாட கூடிய வீரராகவும், என் உடலை மீறி தான் செல்ல வேண்டும் என்று சொல்ல கூடிய வீரராகவும் விளையாடி, சில சிறந்த இன்னிங்ஸ்களை வழங்கியவர்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. இப்படி விளையாடியதற்காக இந்திய ரசிகர்களால் அவர் விரும்பப்பட்டார். அவர் புதிய பந்தில் இருந்து கோலி போன்ற மிடில் ஆர்டர் வீரர்களைப் பாதுகாத்தார். அவருடன் பணிபுரிந்தபோது, அவர் களத்தில் பேட்டிங் செய்ததைப் போலவே அமைதியாக இருக்கிறார். மிகவும் அமைதியானவர், மென்மையாக பேசுபவர், அதே நேரத்தில் மிகவும் பொருத்தமாக பேசுபவர்” என்று கூறினார்.