மும்பை,
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (வயது 42) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன அவர் திறமையான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டார்.
42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் அஸ்வின், ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களின் வருகையால் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார்.
இந்த சூழலில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அமித் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், மற்றும் எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. இந்த பயணம் பெருமை, கஷ்டம், கற்றல், மற்றும் அன்பு என எண்ணற்ற உணர்வுகளால் நிரம்பியது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள், சக வீரர்கள், மற்றும் மிக முக்கியமாக எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
ஆரம்ப நாட்களில் இருந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களிலிருந்து, மைதானத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயமும் என்னை ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதனாகவும் வடிவமைத்த அனுபவமாக இருந்தது. எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. இந்த பயணத்தை மிகவும் சிறப்பாக்கிய எனது சக வீரர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி. இந்த அத்தியாயத்தை மூடும்போது, எனது இதயம் நன்றி மற்றும் அன்பால் நிரம்பியுள்ளது. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, இப்போது, என்னை உருவாக்கிய இந்த விளையாட்டுக்கு நான் திருப்பி அளிக்க ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.