ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.
மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, “நம் எல்லோருக்கும் ஒரு அம்மா இருக்கிறார், யாரும் யாருடைய அம்மாவைப் பார்த்தும் அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை.

ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி) ஆதரவாக வாக்கு கேட்டார் என்பதுதான்”
மேலும் அவர், “மோடிஜி தான் ‘50 கோடி காதலி’ எனப் (சசி தரூரின் மனைவையை நோக்கி) பேசினார், சோனியா காந்தி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசினார். அவர் நிதிஷ் குமாரின் DNA குறித்துப் பேசியது சரியானதா? பீகார் சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் என் அம்மாவையும் சகோதரியையும் அவமதித்துள்ளனர். சிலமுறை பாஜகவினர் கேமரா முன்னிலையிலேயே அம்மாக்களையும் சகோதரிகளையும் அவதூறாகப் பேசியிருக்கின்றனர்.” என்றார்.
மேலும் மோடி தாய் குறித்து பேசிய நேரத்தையும் விமர்சனத்துள்ளாக்கினார் தேஜஸ்வி.
மோடி அந்த நிகழ்வுக்குப் பிறகு வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு சிரித்து மகிழ்ந்தார். இந்தியா திரும்பிய உடனேயே அழத் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார் தேஜஸ்வி.
மேலும் எதிர்க்கட்சியினர் பாஜக தலைவர்கள் பெண்களை அவதூறாக பேசியுள்ளனர் என்று விமர்சித்துள்ளனர். சமீபத்தில் பாஜக தலைவர் ஒருவர், ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சரிகா பாஸ்வான், தெருக்களில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டார் தேஜஸ்வி யாதவ்.