மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்

லாகூர்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்கு எதிராக நிறைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்க கோரி, கடந்த மே 9 அன்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பொருட்களை சூறையாடினர். இதனால், அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதிவாகின.

அவரை விடுவிக்க வேண்டும் என கோரி, பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும், அவரது கட்சியான தெஹிரிக் – இ – இன்சாப் சார்பில் நாடு தழுவிய மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

போராட்டம் மற்றும் பேரணிகளில் ஈடுபட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மே 9 அன்று நடந்த வன்முறையின்போது, லாகூரில் மூத்த ராணுவ அதிகாரியின் வீடு மீது தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் இம்ரான் கானின் மருமகனான ஷெர்ஷா கானுக்கு, பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஷெர்ஷாவின் சகோதரரான ஷாரெஜ் கானுக்கு இதே வழக்கில் நேற்று ஜாமீன் வழங்கியிருந்தது. அவர்கள் இருவரும் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானின் மகன்கள் ஆவர். இருவரையும், கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி லாகூர் காவல் துறையினர் கைது செய்திருந்தனர். கடந்த வாரம் இறுதியில் அவர்களுடைய போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபற்றி இன்று நடந்த விசாரணையின்போது, ஷெர்ஷாவின் வழக்கறிஞர், மூத்த ராணுவ அதிகாரி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கான வழக்கு பதிவுகளை அவருடைய தரப்பு வழக்கறிஞர் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இதனால், சந்தேக அடிப்படையில் ஒருவர் காலவரையின்றி சிறையில் வைத்திருக்க முடியாது என வாதிட்டார். இந்நிலையில், ஷெர்ஷாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.

மே 9 வன்முறை வழக்கில் இம்ரான் கானுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது இம்ரான் கானுக்கு கிடைத்த வெற்றி என அவருடைய தெஹிரிக் – இ – இன்சாப் கட்சி அப்போது பாராட்டியது. இன்னும் அவர் ஒரு வழக்கில் (அல் காதிர் வழக்கில்) இருந்து விடுதலையாக வேண்டி உள்ளது என அக்கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.