GST cut on ACs 2025: பண்டிகை காலத்திற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நிம்மதியை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அதாவது செப்டம்பர் 3, 2025 நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி அடுக்குகளில் ஒரு பெரிய மாற்றத்தை அரசாங்கம் செய்துள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்நிலையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு வரி விகித அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய வரி அமைப்பு செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த வரி குறைப்பு காணமாக டிவி, ஃபிரிஜ், வாஷிங் மெஷின் மற்றும் குறிப்பாக ஏர் கண்டிஷனர்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஏசி மற்றும் பெரிய டிவிகள் போன்ற பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது இதன் வரி 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி வீட்டு பட்ஜெட்டில் சுமை குறைவதோடு பொதுமக்களால் இந்த பொருட்களை எளிதாக வாங்க முடியும்.
ரூ.25,000 மதிப்புள்ள ஏசியின் விலை இப்போது எத்தனை ரூபாய்க்கு விற்பனையாகும்?
நீங்கள் ஒரு புதிய ஏசி வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால், இப்போது முன்பை விட குறைந்த விலையில் வாங்கலாம். இது தொடர்பாக PTI வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒரு ஏசி தற்போது ₹1,500 முதல் ₹2,500 வரை மலிவாக இருக்கும். வெவ்வேறு மாடல்கள் மற்றும் பிராண்டுகளில் இவை மாறுப்படும். விலை குறைப்பு காரணமாக, மக்கள் இனி பிரீமியம் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மாடல்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
தொழில்துறை எதிர்வினை
• ப்ளூ ஸ்டார் எம்.டி. பி. தியாகராஜன் இதை ஒரு “சிறந்த நடவடிக்கை” என்று கூறி, விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
• பானாசோனிக் லைஃப் சொல்யூஷன்ஸ் இந்தியாவின் தலைவர் மணீஷ் சர்மா, விலைகள் சுமார் 6-7% குறைக்கப்படும் என்று கூறுகிறார், இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் என்றார்.
• கோத்ரேஜ் அப்ளையன்சஸின் கமல் நந்தி இந்த முடிவு இந்தியாவில் ஏசி ஊடுருவலை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறார்.
• டிவி உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் வந்துள்ளது. பெரிய திரை டிவிகள் (32 அங்குலத்திற்கு மேல்) முன்பு 28% ஜிஎஸ்டியின் கீழ் வந்தன, இப்போது அவை 18% மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த முடிவு பிராண்டுகளுக்கு 20% வரை ஆண்டு வளர்ச்சியை அளிக்கும் என்று SPPL தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறினார். 32 அங்குல ஸ்மார்ட் டிவிகளுக்கான வரி வெறும் 5% ஆகக் குறைக்கப்பட்டால், இவை மிகப்பெரிய “கேம் சேஞ்சர்” ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நிறுவனங்களுக்கு ஏன் நிவாரணம் கிடைத்தது?
ஏசி மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பலவீனமான விற்பனையால் சிரமப்பட்ட நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• ஜூன் காலாண்டில் பருவகாலமற்ற மழை மற்றும் ஆரம்ப பருவமழை காரணமாக, குளிர்விக்கும் பொருட்களின் விற்பனை குறைந்தது.
• வோல்டாஸ், ப்ளூ ஸ்டார் மற்றும் ஹேவல்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஏசி வணிக வருவாயில் 34% வரை சரிவைப் பதிவு செய்தன.
• இந்த வரி குறைப்பு காரணமாக, நிறுவனங்கள் புதிய ஆர்டர்கள் மற்றும் விற்பனையில் ஏற்றத்தை எதிர்பார்க்கின்றன.
ஜிஎஸ்டியின் பெரிய பயணம்
ஜிஎஸ்டி (2017) அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த முடிவு மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முன்னதாக இந்த வரி நான்கு அடுக்காக இருந்தன – 5%, 12%, 18% மற்றும் 28%. தற்போது இந்த வரி அடிக்கு இரண்டாக இருக்கும் – 5% மற்றும் 18%. இது வரி முறையை எளிதாக்கும் என்றும், பொதுமக்கள் மிகவும் மலிவு விலையில் பொருட்களைப் பெறுவார்கள் என்றும் அரசாங்கம் நம்புகிறது. பண்டிகைகளுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை சந்தைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும் என்று கூறப்படுகின்றன.
About the Author
Vijaya Lakshmi