மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிய அவர் குஜராத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்ட ரிங்கு சிங், ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்.
அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
இந்நிலையில் அந்த ஒரு இன்னிங்ஸ்தான் ( யாஷ் தயாளின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள்) தனது வாழ்க்கையை மாற்றியதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஆமாம், அந்தப் போட்டியின் மூலம் மக்கள் என்னை அறிவார்கள். அதன் பிறகு எதிர்பார்ப்புகள் நிறைய அதிகரித்துவிட்டன. எல்லோரிடமிருந்தும் எனக்கு நிறைய அன்பு கிடைத்துள்ளது. அந்த 5 சிக்சர்களுக்குப் பிறகு, எனக்கு முற்றிலும் மாறுபட்ட அடையாளம் கிடைத்தது. எனக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்கும். எனக்கு, அது ஒரு மிகப்பெரிய தருணம். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற போது 5 சிக்சர்களை நான் அடித்ததெல்லாம் கனவு போன்று இருக்கிறது.
கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவை ஒவ்வொரு நாளும் நடக்காது. இது எனக்கு நடந்தது. பல வருடங்களாக நான் செய்த கடின உழைப்பு அனைத்தும் அந்த ஒரு இன்னிங்ஸில் பலனளித்ததாக உணர்ந்தேன். அந்த தருணத்தில், கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார் என்று உணர்ந்தேன்” என கூறினார்.