இந்தியா உடனான நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்: ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்

வாஷிங்டன்: இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான 50% வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய – அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியா – சீனா உறவு கூடுதல் வலிமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஜேக் சல்லிவன், கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வெளியுறவுத்துறை இதழில் கூட்டாக எழுதியுள்ள கட்டுரையில், “இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இது வருந்தத்தக்கது.

அதிபர் ட்ம்ப் இந்தியா மீது 50% வரி விதித்தது தவறான நடவடிக்கை. ஒப்பந்தத்துக்கு முன்னோடியாகவே ட்ரம்ப் இப்படி ஒரு நாடகத்தை நடத்தி உள்ளார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுக்கு விளக்க வேண்டும். புதுமை முனைப்பை சீனாவிடம் அமெரிக்கா இழந்துவிடாமல் இருக்க, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மீட்டெடுக்க வேண்டும். இரு நாடுகளின் உறவு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனா சாகசத்தில் ஈடுபடுவதை திறம்பட தடுத்து வந்தது.

‘இந்தியா – பாகிஸ்தான் கொள்கை’ அமெரிக்காவுக்கு இருக்கக்கூடாது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாக நிறுத்தும் போக்கை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தவிர்க்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க கொள்கை இந்தியாவை நோக்கி சாய்ந்துள்ளது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காகவும், அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அந்நாட்டுடனான உறவில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.

கடந்த காலங்களில் அமெரிக்காவின் மிக முக்கிய சர்வதேச கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததை ட்ரம்ப் நிர்வாகம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலை தொடர்ந்தால் அமெரிக்கா, மிக முக்கிய கூட்டாளியை இழக்க நேரிடம்.

கடந்த வாரம், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய நட்புறவு, அமெரிக்கா இந்தியாவை நேரடியாக தனது எதிரிகளின் கைகளில் தள்ளக்கூடும் என்பதை தெளிவுபடுத்தியது.” என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.