மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிதான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டு அவரின் கெரியரை முடித்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பலமுறை விமர்சித்துள்ளார். தோனிதான் தம்முடைய மகனின் கெரியரை அழித்ததாகவும் அவர் பகிரங்கமாக பேசியதை மறக்க முடியாது. அதனால் தோனியை தாம் எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் தன்னுடைய மகன் யுவராஜ் சிங்குக்கு இருந்த நண்பர் சச்சின் மட்டுமே என்று அவரது தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மற்றபடி விராட் கோலி, தோனி உள்ளிட்ட அனைவரும் யுவராஜின் முதுகில் குத்தியவர்கள் என்று அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “யுவராஜுக்கு இருந்த ஒரே நண்பர் சச்சின் தெண்டுல்கர்தான். நான் உங்களிடம் கூறியது போல், வெற்றி, பணம், புகழ் ஆகியவற்றின் உலகில் நண்பர்கள் இல்லை. அவரை சுற்றி எப்போதும் முதுகில் குத்துபவர்கள், கீழே தள்ள நினைப்பவர்கள் இருந்தனர். யுவராஜ் சிங்கை நினைத்து சக வீரர்கள் பயந்தார்கள். ஏனெனில் அவர் அவர்களின் இடத்தை பறித்துவிடுவார் என்று அஞ்சினார்கள். அவர் கடவுளால் படைக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர். அவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எம்எஸ் தோனி, விராட் கோலி உட்பட அனைவரும் யுவராஜ் அவர்களுடைய இருக்கையை பறித்துவிடுவார் என்று பயந்தார்கள்” என கூறினார்.