Shreyas Iyer, India National Cricket Team: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப். 9ஆம் தேதி தொடங்க உள்ளது. வரும் செப். 10ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோத உள்ளது. அடுத்து செப். 14இல் பாகிஸ்தான் அணியுடனும், செப். 19இல் ஓமன் அணியுடனும் இந்தியா மோதுகிறது.
Add Zee News as a Preferred Source
சுப்மான் கில்லுக்கு தான் கேப்டன்ஸி…
அந்த வகையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துவிட்டது. இன்று மாலை முதல் இந்திய அணி தனது பயிற்சியையும் தொடங்க இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. சுப்மான் கில்லுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதேநேரத்தில், ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும் கேப்டன்ஸியிலும் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்காததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடியவர் என்பதால் தற்போதைய டி20ஐ அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லாத சூழல் நிலவுவதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேசியிருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை குவித்து மிரட்டினார்.
கில்லுக்கே அதிக வாய்ப்பு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு டி20ஐ அணியில் இடமில்லை என்பதால் பிசிசிஐ ஓடிஐ அணியில் அவரை கேப்டனாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இதுகுறித்து ஏதும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவரவில்லை. இருந்தாலும், ரோஹித் சர்மாவுக்கு பின் ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் கேப்டன்ஸி பொறுப்பை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துணை கேப்டனாகவே சுப்மான் கில்தான் இருந்தார். எனவே, கேப்டன்ஸி கில்லிடம் ஒப்படைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஸி
ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டதில்லை. கடந்த 2024/25 விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் தலைமையில் விளையாடிய மும்பை அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடரை பொருத்தவரை கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 2024இல் கோப்பையை வென்றார். 2020இல் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து இறுதிப்போட்டி வரை வந்தார், 2025 தொடரிலும் பஞ்சாப் அணியை ஷ்ரேயாஸ் தனது தலைமையில் இறுதிப்போட்டி வரை வரவைத்தார். கடைசியாக பஞ்சாப் அணி 2014ஆம் ஆண்டில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு கொடுப்பது நியாயமில்லை…
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறச் செய்ததற்காக ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் கேப்டனாக்க நினைப்பது தவறு என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறச் செய்தார் என்பதற்காக, அவரை இந்திய கேப்டனாக நியமிப்பது நியாயமில்லை. ஐபிஎல் அணியை வழிநடத்துவதும், இந்திய தேசிய அணியை வழிநடத்துவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். கேப்டன் பதவி தொடர்பான இத்தகைய ஒப்பீடுகள் அர்த்தமற்றவை” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “பிசிசிஐக்கு சொந்த உள்நாட்டு லீக்கை நடத்துகிறது. ஆனால் நீங்கள் ஒரு சர்வதேச அணியை தேர்வு செய்யும்போது 15 வீரர்களையும், அவர்களை திறம்பட நிர்வகிக்கக்கூடிய ஒரு கேப்டனையும் கண்டறிய வேண்டும். ஐபிஎல் தொடரில், பெரும்பாலும் இளம் மற்றும் உள்நாட்டு வீரர்கள் இருப்பார்கள், சில வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள். எனவே, ஐபிஎல் கேப்டன் பதவியின் தரநிலை இங்கே வேறுபடும். மேலும் அதை சர்வதேச கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவது அர்த்தமற்றது” என்றார்.