பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி, மேற்கு மண்டலத்துடன் மோதியது. இதில் முதலில் ஆடிய மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கெய்க்வாட் 184 ரன்கள் குவித்தார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய மண்டல அணி 3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 157 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த சூழலில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்த நிலையில் ஆல் ஆவுட் ஆனது. இதன் மூலம் மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 162 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சுபம் ஷர்மா 96 ரன்னும், உபேந்திர யாதவ் 87 ரன்னும், கேப்டன் ரஜத் படிதார் 77 ரன்னும் சேர்த்தனர்.
பின்னர் 162 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மத்திய மண்டல அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் வடக்கு – தெற்கு மண்டல அணிகள் மோதின. இந்த ஆட்டமும் சமனில் முடிந்தது. இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தெற்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய வடக்கு அணி முதல் இன்னிங்சில் 361 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.
வரும் 11-ம் தேதி தொடங்க உள்ள இறுதிப்போட்டியில் தெற்கு – மத்திய மண்டல அணிகள் மோத உள்ளன.