புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை நதி அதன் அபாய அளவை நெருங்கி வெள்ள நீர் பாய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி யமுனையில் அபாய அளவான 205.33 மீட்டருக்கு மிக நெருக்கமாக 204.5 மீட்டர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனையின் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நவுகான் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் அங்குள்ள வீடு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளை சேற்று நீர் சூழ்ந்தது.
அந்தப் பகுதியில் வசித்த மக்கள் முன்னெச்சரிக்கை மற்றும் மழையின் தீவிரத்தை கருதி மேகவெடிப்பு ஏற்படுவதற்கு முன்பே அங்கிருந்து மாற்று இடத்துக்கு சென்றிருந்தனர். அதனால் அங்கு உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
வட மாநிலங்களில் கனமழை காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நேற்றும் மழை தொடர்ந்தது. லூதியானாவில் நேற்று மழைப் பொழிவு பொழிந்தது. கடந்த மாதம் முதல் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதேபோல ஹரியானா மாநிலத்தில் சுமார் 3,000 கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நயாய் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் கூறியுள்ளார். ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இமாச்சல் மாநிலத்தில் இந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட சேதத்தின் இழப்பு ரூ.4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.