ஷ்ரேயாஸ் ஐயரால் இந்த அதிரடி வீரருக்கு பிரச்சனை – இனி இந்திய அணியில் இடமில்லை!

India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி நீண்ட ஓய்வில் இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு (டி20ஐ தொடர்) இந்திய அணி தயாராகி வருகிறது. செப். 28ஆம் தேதிவரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Team India: 11 மாதங்களுக்கு பின்…

ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு அக்டோபர் 2ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கும். கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் மோசமான தோல்வியை சந்தித்த பிறகும்; விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வை அறிவித்த பின்னரும் உள்நாட்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் டெஸ்ட் அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.  

India A vs Australia A: இந்தியா ஏ ஸ்குவாட் அறிவிப்பு 

தற்போது இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலிப் டிராபி நடைபெற்று வருகிறது. வரும் செப். 15ஆம் தேதியோடு துலிப் டிராபி தொடர் நிறைவடையும், அக்டோபர் முதல் வாரத்தில் இரானி கோப்பை போட்டி நடைபெறும். அக்டோபர் 15ஆம் தேதி ரஞ்சி கோப்பை தொடங்கிவிடும். இதற்கு பின் வரும் செப். 16ஆம் தேதி இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஒரு போட்டி 4 நாள்கள் நடைபெறும். முதல் போட்டி செப். 16 – செப். 19 வரையிலும், இரண்டாவது போட்டி செப். 23 – செப். 26 வரையிலும் நடைபெற இருக்கிறது. இரண்டு போட்டிகளும் லக்னோவில் நடைபெறுகிறது. 

இந்த தொடருக்கு பின்னர் செப். 30, அக். 3, அக். 5 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் கேப்டனாக செயல்படுகிறார். அதேநேரத்தில், கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோரும் தொடரில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் 2வது போட்டியில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarfaraz Khan: சர்பராஸ் கான் புறக்கணிப்பு

இந்நிலையில், இந்த ஸ்குவாடில் சர்பராஸ் கான் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. சர்ஃபராஸ் கான் புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்தபோது, காயத்தில் சிக்கினார். இதனால், காயத்தில் இருந்து குணமடைய அவர் மூன்று வாரக்காலம் ஓய்வில் இருக்க வேண்டியதாகி உள்ளது. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள என்சிஏவில் முகாமிட்டுள்ளார். தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். துலிப் டிராபியில் மேற்கு மண்டல அணியில் இடம்பெற்றிருக்கும் இவர் அரையிறுதியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை அந்த அணி இறுதிப்போட்டி சென்றால் சர்பராஸ் கான் அதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Sarfaraz Khan: தயக்கம் காட்டும் பிசிசிஐ

ஆனால், தற்போது ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான தொடரிலேயே சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. டெஸ்டில் இந்திய அணிக்காக 11 இன்னிங்ஸில் 371 ரன்களை அடித்துள்ள சர்பராஸ் கான் கடைசியாக கடந்தாண்டு மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதற்கு பிறகு பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ அணியில் சர்பராஸ் இடம்பெற்றிருந்தார். அதிலும் ஒரு போட்டியில் (ஒரு இன்னிங்ஸில்) மட்டும் விளையாடி 92 ரன்களை குவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்திய ஸ்குவாடிலேயே இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். அதன்படி, 17 கிலோவை குறைத்து, உள்நாட்டு சீசனுக்காக தயாராகி வந்தார். ஆனால், புச்சி பாபு தொடரிலேயே அவர் மீண்டும் காயத்தில் சிக்கியது துரதிருஷ்டவசமானது. தொடர்ந்து அவர் காயத்தில் சிக்குவதால் இந்திய அணி அவரை டெஸ்ட் அணியில் எடுக்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

Sarfaraz Khan: சர்பராஸ் கானுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்

அதனால்தான் அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வாகவில்லை எனலாம். சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாத அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் நுழைவதற்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாகி இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நம்பர் 5 ஸ்பாட்டில் ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கானுக்கு பதிலாக விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா என அடுத்தடுத்து உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சர்பராஸ் கானுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

India A Squad: ருதுராஜ் கெய்க்வாட்டும் புறக்கணிப்பு 

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் சர்பராஸ் கான் மட்டுமின்றி ருதுராஜ் கெய்க்வாட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவர் துலிப் டிராபி அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல அணிக்கு எதிராக 184 ரன்களை குவித்தது கவனிக்கத்தக்கது. 

இந்தியா ஏ ஸ்குவாட்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்கூர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.