BCCI Bank Balance: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான், கிரிக்கெட் உலகில் அதிக வருமானத்தை குவிக்கும் வாரியம் என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பும், சந்தையும் இருப்பதால் பிசிசிஐ இந்தளவிற்கு வருமானத்தை குவிக்கிறது எனலாம்
Add Zee News as a Preferred Source
பிசிசிஐ வங்கி இருப்பு
அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.14 ஆயிரத்து 627 கோடியை குவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. இதன்மூலம் பிசிசிஐயின் வங்கி இருப்பு தற்போது ரூ.20,686 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில வாரியங்களுக்கு அனைத்து நிலுவைத் தொகைகளையும் வழங்கிய பிறகு பிசிசிஐயின் இருப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
இரு மடங்காக உயர்ந்த பொது நிதி
2019ஆம் ஆண்டில் ரூ.3,906 கோடியாக இருந்த பிசிசிஐயின் பொது நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.7,988 கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023-24 நிதியாண்டிற்கு பிசிசிஐ ரூ. 3,150 கோடியை வருமான வரியாக ஒதுக்கியுள்ளது.
ஊடக உரிமையில் வருமானம் குறைந்தது
பிசிசிஐயின் வருமானம் அதிகரித்திருந்தாலும், ஊடக உரிமையின் வரும் வருமானம் குறைந்திருக்கிறது. உள்நாட்டில் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறைந்ததால் மொத்த ஊடக உரிமை வருமானம் ரூ.2,524.80 கோடியில் இருந்து ரூ.813.14 கோடியாக குறைந்திருக்கிறது. இருப்பினும், பிசிசிஐயின் முதலீட்டு வருமானம் ரூ.533.05 கோடியில் இருந்து ரூ.986.45 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிசிசிஐ அதன் டெபாசிட்களின் மூலம் பெறப்பட்ட அதிக வருமானம்தான் இதற்கு காரணம்.
ஐபிஎல் மூம் பெற்ற வருவாய் மற்றும் ஐசிசி விநியோகங்கள் ஆகியவற்றால் 2023-24 நிதியாண்டில் ரூ.1,623.08 கோடியை பிசிசிஐ உபரியாக பெற்றிருக்கிறது. இது 2022-23 நிதியாண்டில் ரூ.1,167.99 கோடியாக இருந்ததாக கூறப்படுகிறது.
பிசிசிஐயின் முக்கிய செலவினங்கள்
2023-24 ஆம் ஆண்டில், பிசிசிஐ உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடியை செலவிட்டுள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடியை செலவழித்துள்ளது. வெள்ளி விழா நலவாரிய நிதிக்காக ரூ.350 கோடியை ஒதுக்கியிருக்கிறது. பிசிசிஐயிடம் இருந்து அனைத்து மாநில சங்கங்கள் ரூ.1,990.18 கோடியைப் பெற்றிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிசிசிஐ நடப்பு ஆண்டில் ரூ.2,013.97 கோடியை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டின் பிசிசிஐ வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் வரும் செப். 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனலாம்.