துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் 2.1 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தில் யுஏஇ பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார்.
ஆனால் அந்த சமயத்தில் அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். இதனை கவனித்த சஞ்சு சாம்சன் உடனடியாக ஸ்டம்பு மீது பந்தை எறிந்து அவுட் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். இந்த சுவாரசிய சம்பவம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.