கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி(நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.