“கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருப்பூர்: கேபிள் டிவி சேவையில் செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திருப்பூர் மாநகர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரையில் இன்று (செப்.9) பேசியது: ”திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இன்றைக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த மண்ணில் பிறந்தவருக்கு மிகப் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது.

இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையான, மகிழ்ச்சியான நாளாகும். அதிமுக ஆட்சியில்தான் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதா? திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.350 கோடியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, இன்றைக்கு திருப்பூர் தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலோ அல்லது திருப்பூர் மாநகருக்குள்ளோ திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட்டுள்ளதோ?

திமுக எப்போதோல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு சீர்கெடும். போதைப்பொருள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி, சூன்யமாகிக் கொண்டிருக்கிறது. இது தான் திமுகவின் சாதனை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என அதிமுக சார்பில், சட்டப்பேரவையில் கவனத்துக்கு கொண்டுவந்தோம். ஆனால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் முதியோர் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் களவாடப்படுகின்றன.

திமுக ஆட்சியில் 40 சதவீதம் உணவுப்பொருள் விலை உயர்ந்துள்ளது. வீடு, கடை வரி உயர்ந்துள்ளது. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்ததுதான் திமுகவின் சாதனை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கமும், திருமண உதவி திட்டமும் தொடரும். 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டுவரப்படும். மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் திறக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி சேவை, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டது. இன்றைக்கு அந்த சேவை குறைந்துவிட்டது. திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு, வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் பெறப்பட்டுள்ளது. வாடகை மிக, மிக உயர்வு. இதற்கு புதிய செட்டாப் பாக்ஸ் வாங்கி கொடுத்திருக்கலாம். இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்துக்கு இப்படி வழங்குவதன் மூலம் சுமார் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படும். திமுக குடும்பம், கேபிள் டிவியை நடத்துவதால், அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்று நினைக்கிறது. அன்றைக்கு 30 லட்சம் இணைப்புகள் இருந்தன. இன்றைக்கு 14 லட்சம் இணைப்புகள் மட்டுமே உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் பெற்ற, ’முதல்வரின் முகவரி’ திட்டத்தில் 9 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போது ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துவங்கப்பட்டு, மனுக்கள் பெறப்படுகிறது. திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினோம். திருப்பூர் மாநகருக்கு 4ம் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த பிரசாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.