சில இந்திய வீரர்கள் இன்னும் அவர்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க போராடுகிறார்கள் – அப்ரிடி சாடல்

லாகூர்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

முன்னதாக பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜூலை 20-ம் தேதி லெஜண்ட்ஸ் லீக் தொடரில் நடக்கவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரையிறுதியிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் உருவானது. அந்த போட்டியிலும் இந்திய அணி விலகியதால் பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த சூழலில் தற்போது ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற உள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் தாங்கள் இந்தியர்கள் என நிரூபிக்க போராடுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி சாடியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “நான் எப்போதுமே கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்க மாட்டேன். கிரிக்கெட் என்ன நடந்தாலும் விளையாடப்பட வேண்டும். கிரிக்கெட் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என நான் நம்புகிறேன். இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஸ் லெஜன்ட்ஸ் தொடர் நடைபெற்றபோது, இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் டிக்கெட்களை அதிக அளவு வாங்கி இருந்தனர். வீரர்களும் இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் திடீரென்று நாங்கள் விளையாட மாட்டோம் என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நான் ஏதாவது ஒரு வீரரின் பெயரை சொன்னால், அவர்களின் வாழ்க்கை கடினமாகிவிடும். ஆனால் அந்த வீரரை நான் கெட்ட முட்டை என்று சொல்கிறேன்.

அந்த அணியின் கேப்டன் கூட உங்களுக்கு உங்களுக்கு விளையாட விருப்பம் இல்லை என்றால் விளையாட வேண்டாம். அதனை சமூக வலைத்தளத்தில் ஏன் பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சில வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கத்துடன் தான் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். இதனால் தான் அவர்களை நான் கெட்ட முட்டை என்று கூறுகின்றேன்.

இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் பிறந்ததிலிருந்து நாங்களும் இந்தியர்கள்தான் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அந்த தொடரில் இருந்து விலகியவர்கள் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு வர்ணனை செய்கிறார்கள்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.