திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயின், அவரின் மனைவி, மகன் ஆகியோர் கடையில் இருந்தனர். அப்போது பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், தங்க நகைகளை வாங்க வந்திருந்தார். அவரிடம் தங்க நகைகளை தேவராஜின் குடும்பத்தினர் காண்பித்துக் கொண்டிருந்தனர். தங்க நகைகளின் டிசைன்களை பார்த்த அந்தப் பெண், அதில் சிலவற்றை தேர்வு செய்தார். பின்னர் தன்னுடைய கணவர், பணம் எடுத்துக் கொண்டு வருகிறார். வந்தவுடன் பில் போட்டு நகைகளை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதை உண்மையென தேவராஜின் குடும்பத்தினர் நம்பியிருக்கிறார்கள்.

அரைமணி நேரமாகியும் அந்தப் பெண்ணின் கணவர் வரவில்லை. இந்தச் சமயத்தில் திடீரென அந்தப் பெண், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவராஜை மிரட்டத் தொடங்கினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேவராஜ், அந்தப் பெண்ணிடமிருந்த கத்தியை பறிக்க முயன்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தேவராஜ் மீது வீசினார். அதைப் பார்த்த தேவராஜின் மனைவி, மகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர். ஆனாலும் அந்தப் பெண் கத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் தேவராஜின் மகன், அந்தப் பெண் தப்பிச் செல்லாமல் அவரை மடக்கிப் பிடித்தார். அவருக்கு உறுதுணையாக தேவராஜின் மனைவியும் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டார். இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் நகைக்கடைக்குள் வந்தனர். அதன்பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தப் பெண்ணிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தேவராஜ் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்தப் பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவரின் பெயர் ஜெயசித்ரா (40) என்றும் திருவொற்றியூர் காலடிபேட்டையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் கணவருக்கு தெரியாமல் சிலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் ஜெயசித்ராவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அதனால் நகைக்கடையில் திருட திட்டமிட்ட ஜெயசித்ரா, கத்தி, மிளகாய் பொடியுடன் சென்று கைவரிசை காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஆனால் நகைக்கடையிலிருந்தவர்கள் ஜெயசித்ராவைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனர். ஜெயசித்ரா கைதான பிறகே அவர் கடன் வாங்கியிருக்கும் தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது.