காத்மாண்டு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையை கண்டித்து அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ராணுவம் களத்தில் இறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என தகவல் வெளியான நிலையில், தான் தற்போது வடக்கு காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவத்தின் ஷிவ்புரி முகாமில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக சர்மா ஒலி, இந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், அவர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழக்க நேரிட்டதாகவும், தனது வெளியேற்றத்திற்கு பின்னால் இந்தியாவின் திட்டம் உள்ளது என்றும் சர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“இயற்கையிலேயே நான் கொஞ்சம் பிடிவாதக்காரன். அந்த பிடிவாதம் இல்லையென்றால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே அனைத்தையும் கைவிட்டிருப்பேன். அதே பிடிவாதத்தால்தான், நேபாளத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று நான் கூறினேன்.
லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்தவை என்று நான் வலியுறுத்தினேன். ஸ்ரீ ராமர் வேதங்கள் சொல்வது போல் இந்தியாவில் அல்ல, நேபாளத்தில் பிறந்தார் என்று நான் வாதிட்டேன். இந்த நிலைப்பாடுகளில் நான் சமரசம் செய்திருந்தால், நான் பல நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். எனது வாழ்க்கை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், நான் எனக்கு சொந்தமான அனைத்தையும் நாட்டுக்கு கொடுத்துவிட்டேன். எனக்கு பதவியும், பெருமையும் ஒருபோதும் முக்கியமில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.