Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்களில் விளையாடி 5 முறை சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்கிறது, 10 முறை இறுதிப் போட்டியிலும் விளையாடி உள்ளது.
Add Zee News as a Preferred Source
சிஎஸ்கே என்றாலே பெரும்பாலானோர் தோனியை தான் முன்னிலைப்படுத்துவார்கள். ஆனால், சிஎஸ்கேவில் தோனியை தாண்டி பல்வேறு படைத் தளபதிகள் இருந்திருக்கிறார்கள். சிஎஸ்கே எப்போதுமே வீரர்களுக்கு நெருக்கமான அணியாகவும், ஒரு குடும்பமாகவும் திகழும் என பல வீரர்கள் பொதுவெளியில் கூறியிருக்கிறார்கள். சிஎஸ்கேவில் நிலவிய இந்த ஆரோக்கியமான சூழல்தான் அவர்கள் அதிக முறை கோப்பையை வெல்ல வழிவகுத்துள்ளது.
CSK: சிஎஸ்கேவின் இந்த 4 வீரர்கள்
அந்த வகையில், ஐபிஎல் தொடரில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஒரே அணியில் விளையாட தொடங்கி, இறுதியில் அங்கேயே ஓய்வுபெறுவார்கள். அப்படி, சிஎஸ்கேவில் விளையாடத் தொடங்கி மற்ற அணிகளுக்கு விளையாடிவிட்டு சிஎஸ்கேவில் வந்து ஓய்வு பெற்ற 4 வீரர்களை இங்கு காணலாம்.
CSK: மைக்கெல் ஹசி
2008ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் இருந்து மைக்கெல் ஹசி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி நிலையில், மீண்டும் 2015இல் சிஎஸ்கேவுக்கே திரும்பினார். அதோடு ஓய்வை அறிவித்தார். தற்போது சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு வகிக்கிறார்.
CSK: முரளி விஜய்
இவரையும் சிஎஸ்கே OG ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2009ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த விஜய், 2014ஆம் ஆண்டில் டெல்லி அணிக்கு சென்றார். தொடர்ந்து, 2015 மற்றும் 2016இல் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
2016இல் பஞ்சாப் கேப்டனாக இருந்த அவர் 2017இல் காயம் காரணமாக ஐபிஎல் விளையாடவில்லை. 2018இல் சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தபோது, இவரும் சிஎஸ்கேவில் கம்பேக் கொடுத்தார். 2020இல் சிஎஸ்கேவில் விளையாடியபோது ஓய்வை அறிவித்தார்.
CSK: சுரேஷ் ரெய்னா
‘சின்ன தல’ என செல்லமாக அழைக்கப்படும் இவர் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கேவில் விளையாடினார். 2016, 2017இல் சிஎஸ்கே விளையாடாதபோது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இவர் செயல்பட்டார். தொடர்ந்து அவர் 2018இல் சிஎஸ்கே அணிக்கே திரும்பினார். 2021ஆம் ஆண்டு வரை சிஎஸ்கேவில் விளையாடினார்.
அடுத்து சிஎஸ்கே அவரை ஏலத்தில் விடுவித்தது. 2022 மெகா ஏலத்தில் யாரும் அவரை வாங்காத நிலையில் அவர் ஓய்வை அறிவித்தார். அவர் கடைசியாக சிஎஸ்கே அணிக்காகவே விளையாடியிருந்தார். சிஎஸ்கேவில் தோனி இப்போது வரை நம்பர் 1 வீரர் என்றால், ரெய்னா தான் நம்பர் 2 வீரர் எனலாம்.
CSK: ரவிசந்திரன் அஸ்வின்
2009ம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் 2015ஆம் ஆண்டுவரை அங்கு விளையாடினார். 2016, 2017 சீசன்களில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.
2018 மற்றும் 2019 சீசன்களில் பஞ்சாப் அணிக்காகவும், 2020 மற்றும் 2021 சீசன்களில் டெல்லி அணிக்காகவும் விளையாடினார். 2022 முதல் 2024 சீசன்கள் வரை ராஜஸ்தான் அணியில் விளையாடிய அவர், 2025இல் சிஎஸ்கேவுக்கு திரும்பினார். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
CSK: லிஸ்டில் தோனி…?
மேலே குறிப்பிட்டுள்ள மைக்கெல் ஹசி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, ரவிசந்திரன் அஸ்வின் ஆகிய நால்வரும் தோனியின் கேப்டன்ஸியில் ஐபிஎல் பயணத்தை தொடங்கி தோனியின் கேப்டன்ஸியின் கீழ்தான் ஐபிஎல் வாழ்க்கையையும் முடித்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தோனி ஓய்வு பெற்றால் இந்த லிஸ்டில் அவரும் சேர்ந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.