அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பெயரை மாற்ற வேண்டும்: உ.பி. அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்நிலையில், இணையமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங், இப்பல்கலைகழகத்தின் பெயரை ஹரிகர் பல்கலைக்கழகம் என மாற்ற வலியுறுத்தி உள்ளார்.

உபியின் மீரட்டில் 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலவரத்தின் தாக்கமாக உருவானது ஆங்கிலோ முகம்மதன் ஓரியண்டல் கல்லூரி. கடந்த 1875-ல் சர் சையத் அகமது கான் என்பவரால் நிறுவப்பட்ட இக்கல்லூரி தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகமாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசின் அந்தஸ்தையும் இந்த பழம்பெரும் பல்கலைகழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை செய்து வருகிறது.இந்து மாணவர்களை விட முஸ்லிம்கள் அதிகமாகப் பயில்வதால் இது சிறுபான்மை அடையாளத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால், அப்பல்கலைகழகத்தின் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவது உண்டு.

இதுபோன்ற சர்ச்சைகளுக்கு ஏஎம்யு பெயர் பெற்று விட்டது. தற்போது இதில் உள்ள முஸ்லிம் எனும் பெயரை மாற்றுவது குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இது குறித்து உபியின் கேபினேட் அமைச்சரான ரகுராஜ்சிங் அலிகரில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ’அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிலம் இந்திய அரசிற்குச் சொந்தமானது.

மத்திய அரசின் நிதி இந்தப் பல்கலைக்கழகத்திற்காக செலவிடப்படுகிறது. எனவே, அதை எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது வகுப்பினரின் அடையாளத்துடனும் தொடர்புபடுத்த முடியாது. எனவே, அதன் பெயரை மாற்ற வேண்டும். இப்பல்கலையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது, அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அலிகரின் மண் போலே பாபா மற்றும் புனித ஹரிதாஸுடன் தொடர்புடையது.

எனவே, பல்கலைக்கழகத்தின் பெயரை ’ஹரிகர் பல்கலைக்கழகம்’ என்று மாற்ற வேண்டும். இதன் மாணவர்கள் சேர்க்கையில் அனைத்து வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.

இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தலித் – பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அரசியலமைப்பு ரீதியாக இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுகின்றனர். இதைப்போல, அலிகர் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் ஒதுக்கீடுகளைப் பெற வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.-

இதுபோல், அலிகர் நகரையும், ‘ஹரிகர்’ எனப் பெயரை மாற்றக் கோரி பாஜக மற்றும் இந்துத்துவாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.இதில், 3,500 பேராசிரியர்களும், 5,000 அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். இதில், பள்ளிகள், ஆண் பெண்களுக்கான ஐடிஐ, பாலிடெக்னிக், மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மாருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும் அமைந்துள்ளன.

இதன் மீதான சிறுபான்மை அந்தஸ்து உபி அலகாபாத் நீதிமன்ற வழக்கால் நீக்கப்பட்டது. இதன் மீதான மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.