பிரேசிலியா,
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியுற்றதை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் ராணுவத்தின் முயற்சியால் அவரது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் பொல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீதான மற்ற வழக்குகளின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. அந்த வழக்குகளிலும் குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் பொல்சனாரோ இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இதற்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், `பொல்சனாரோ ஒரு சிறந்த நபர். அவருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை வருத்தம் அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.