ஐசால்,
மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். முன்னதாக லெங்போய் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, விழா நடைபெறும் லம்முவால் மைதானத்திற்கு அவர் செல்லமுடியவில்லை. இதையடுத்து காணொலி மூலம், மிசோரம் தலைநகர் ஐசாலை டெல்லியுடன் இணைக்கும் மாநிலத்தின் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய ரெயில்வே துறை வரலாற்றில் மிகவும் சவாலான பணியாக கருதப்படும் ரூ.8,070 கோடி மதிப்பிலான பைராபி-சாய்ராங் ரெயில் பாதை திட்டத்திற்கு கடந்த 2008-09ல் அனுமதி வழங்கப்பட்டு 2015-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பாதையில் 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள் மற்றும் 87 சிறிய பாலங்கள் உள்ளன. சாய்ராங் அருகே உள்ள பாலம் எண் 144, குதுப் மினாரை விட 114 மீட்டர் அதிக உயரம் கொண்டது.
இந்த பாதையில் 5 சாலை மேம்பாலங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதைகள் உள்ளன. இவை தவிர ஹோர்டோகி, கான்புய், முவால்காங் மற்றும் சாய்ராங் ஆகிய 4 முக்கிய ரெயில் நிலையங்கள் உள்ளன. மிசோரம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கு ரெயில் பாதையானது, அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த, லாபகரமான பயண சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய நிகழ்வில், சாய்ராங் (ஐசால்)-டெல்லி (ஆனந்த் விஹார் முனையம்) ராஜதானி எக்ஸ்பிரஸ், சாய்ராங்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் சாய்ராங்-கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரெயில்வே, சாலைகள், எரிசக்தி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.