“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு

சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

காலை 10:35 மணியளவில் மரக்கடை பகுதியில் விஜய்க்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதிக்குச் செல்வதற்கே சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலானது. தொண்டர்கள் நடந்து சென்று பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்த நிலையில், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து, பிரச்சார மேடையை அடைந்தது.

பின்னர் அவர் பேசும்போது, “அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.

மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். திருச்சிக்கென்று சிறப்பு வரலாறு உள்ளது.

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

திமுக-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள். எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். உதவி செய்துவிட்டு சொல்லி காட்டுவதற்கு , உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம்.

மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்சினைகளில் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? அரசு உதவியை செய்துவிட்டு, மக்களை கொச்சைப்படுத்துகிறது. மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?” என்று விஜய் பேசினார். பின்னர், உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டும், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

பேச்சை சுருக்கமாக முடித்த விஜய்: விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.