சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளது இங்கிலாந்து அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 304 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம், டாப் 6 அணிகளுக்கு இடையேயான போட்டியில் 300 ரன்களை கடந்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் இங்கிலாந்து நிகழ்த்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
The moment we passed runs!
Ridiculous performance pic.twitter.com/J16JyK4ebe
— England Cricket (@englandcricket) September 12, 2025
சால்ட், பட்லர் சரவெடி
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர், தென்னாப்பிரிக்கப்பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த போட்டியில் ஃபில் சால்ட் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து, இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் அடித்த சதமே சாதனையாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 15 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 141 ரன்கள் குவித்த சால்ட், இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தார். மறுமுனையில், ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு வெறும் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 8 ஓவர்களுக்குள் 129 ரன்களை குவித்தது. பவர்பிளே முடிவில் இங்கிலாந்து அணி 100 ரன்களை கடந்து, அதிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது.
முறியடிக்கப்பட்ட இந்தியாவின் சாதனை
இங்கிலாந்து அணியின் இந்த 304 ரன்கள், இரண்டு முழு உறுப்பினர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு, 2024ல் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி அடித்த 297/6 என்ற ஸ்கோரே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில், இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். நேபாளம் (314/3) மற்றும் ஜிம்பாப்வே (344/4) ஆகிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
146 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி
305 ரன்கள் என்ற வரலாற்று இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி, 17 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1-1 என சமன் செய்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான இந்த தொடரில் பல்வேறு சாதனைகள் முடியடிக்கப்பட்டு வருகிறது.
About the Author
RK Spark