Best Entertainment Channel – விக்கல்ஸ்

முழுநீளத் திரைப்படத்தை 10 நிமிட `ஸ்பூஃப்’ செய்து அலப்பறை கொடுப்பது, நண்பர்களின் உரையாடலை மூலதனமாக வைத்து அன்றாட நிகழ்வுகளை கன்டென்ட் ஆக்குவது, கருத்து விருந்தினை நகைச்சுவை எனும் தலைவாழை இலையில் பரிமாறுவது என ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லியடிக்கும் Vikkals டீமுக்கு, Best Entertainment Channel விருது வழங்கப்பட்டது.
விருதினை கவிஞர் யுகபாரதி வழங்க Vikkals டீம் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து பேசிய விக்கல்ஸ் குழுவினர், “1300 ரீல்ஸ் பண்ணிருக்கோம்.
10 ரீல்ஸ்தான் பிரபலமாகியிருக்கும். என்ன ஆனாலும் விடாமல் தொடர்ந்து உழைப்ப போட்டுகிட்டே இருப்போம். அநேகன் பட ஆத்தாடி பாட்டு ரீல்ஸ் பிரபலமான பிறகுதான் நாங்கள் வெளியில் தெரிய ஆரம்பிச்சோம்.
அதனால கிட்டதட்ட 12 நாடுகளுக்கு போய்ட்டு வந்துட்டேன், பல மேடைகளுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
இவ்வளவு பிரபலமாகியும் என் அப்பாவுக்கு பிரம்மிப்பாக இல்லை. ஆனால், விகடன் விருது கொடுக்குறாங்கனு சொன்னதும் பிரமிச்சுப் போய்ட்டார்” என்று கூறினார்.
Best Info Channel – தேநீர் இடைவேளை

நாம் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பிரதிபலிக்கும் காட்சிக் கோர்வைகள், கேள்விகள், அவற்றுக்குத் தெளிவான பதில்கள் என அனைத்தும் ‘தேநீர் இடைவேளை’-யின் அசுர பலம். தட்கல் டிக்கெட் தொடங்கி, தங்கத்தின் தரம் வரை அலசி ஆராயும் தேநீர் இடைவேளை குழுவுக்கு Best Info Channel விருது வழங்கப்பட்டது.
விருதை வழங்குகையில் பேசிய கவிஞர் யுகபாரதி, “தாமரை விதை பற்றிய தகவல்களை நான் தேடிக்கொண்டிருக்கும்போது என் மகள் மூலம், இந்த தேநீர் இடைவேளை சேனலை தெரிந்துகொண்டேன். இந்த கால டிஜிட்டல் தலைமுறைகள் நல்லவற்றை செய்வதைப் பார்க்கும்போது ‘மண்ணிலே ஈரமுண்டு, முள் காட்டில் பூவும் உண்டு’ என்ற பாடல் வரிகள்தான் மனதில் தோன்றுகிறது” என்று கூறினார்.
Best Impact Creator Winner – Buhari Junction

விளிம்புநிலை மனிதர்களின் துயர்மிகு வாழ்வைப் பொது சமூகத்தின் பார்வைக்கு வைக்கும் புஹாரி ராஜாவுக்கு Best Impact Creator விருது வழங்கப்பட்டது.
“தமிழ் யூடியூப் சேனலின் OG நான்தான்” – Digital ICON விஜய் வரதராஜ்

யூடியூப் காலம் தொடங்கியதிலிருந்து இன்றைய அதிநவீன ஏ.ஐ காலம் வரை தமிழ் இணைய உலகின் இளவரசனாக வலம் வரும் விஜய் வரதராஜுக்கு Digital ICON விருதை விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய விஜய் வரதராஜ், “தமிழ் யூடியூப் சேனலின் OG நான்தான் என்பதை நானே ஒத்துக்கிறேன். இந்த விருதை கையில் வாங்க 15 வருஷம் ஆகிடுச்சு. இதுக்கு மேலையும் எந்த விருதும் கிடைக்கலைனா நான் இவ்வளவுநாள் ஓடுனதுக்கு ஆர்த்தமில்லை. இந்த நேரத்தில் என்னோட பயணித்த எல்லோருக்கும் நன்றி” என்று கூறினார்.
Best Food Reviewer – Foodies Findings யுவராணி

உணவில் வித்தியாசம் பார்க்காமல், தகவல்களையும் வழிகாட்டலையும் அன்லிமிட்டெட் மீல்ஸாக்கி விருந்து படைக்கும் Foodies Findings யுவராணிக்கு Best Food Reviewer விருது வழங்கப்பட்டது.
ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் விருது வழங்க யுவராணி அதைப்பெற்றுக் கொண்டார்.
Digital ICON Award – RJ Vikneshkanth

பல பரிமாணங்களெடுத்து இத்தனை ஆண்டுகளாக டிஜிட்டல் தளத்தில் கோலோச்சும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்துக்கு விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன் Digital ICON Award விருது வழங்கினார்.
Best Solo Creator (Female) – சோனியா

பெண் உலகினை நகைச்சுவை முலாம் பூசி, உண்மையாக எடுத்து வைப்பதில் கவனம் பெற்றுவரும் சோனியாவுக்கு Best Solo Creator (Female) விருது வழங்கப்பட்டது.
`சிறகடிக்க ஆசை’ சீரியல் இயக்குநர் குமரன் விருது வழங்க சோனியா பெற்றுக் கொண்டார். விருதை வழங்கி வாழ்த்திய குமரன், “சிலர் கருத்துகளை பிரச்சாரமான தொணியில் வீடியோ போடுவார்கள்.
ஆனால், நல்ல கருத்துகளை மிகுந்த நகைச்சுவையுடன் போடுபவர் சோனியா. உண்மையில் நான் அவருடைய ரசிகர்.
இப்போகூட அவரது வீடியோ பார்த்துட்டுதான் வந்தேன். அவருக்கு சினிமா வாய்ப்புகள், பல மேடைகள் காத்திருக்கின்றன” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சோனியா, “மணிரத்னம் சார் வீட்டிலிருந்து கூட எனக்கு மெசேஜ் வந்திருக்கிறது. வீடியோ நல்ல பண்ணேனு சொல்வாங்க பாராட்டியிருங்காங்க.
பெண்கள் சமூகவலைதளங்களில் இயங்குவது சவாலானதுதான். ஆனால், எல்லோரும் எனக்கு நல்ல வரவேற்பைப் கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
Best Travel Vlogger – Krohan Spot

2025-ம் ஆண்டின் Best Travel Vlogger விருது Krohan Spot சேனலின் ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டது. தனது தாயுடன் சேர்ந்து இந்த விருதை ராஜ்மோகன் பெற்றுக்கொண்டார்.
மகனின் இந்த உயரத்தைக் கண்டு மேடையில் கண்ணீர் சிந்திய தாய், “விருது வாங்குறத டிவி-ல பாத்திருக்கிறோம். இன்னைக்கு நாங்களே மேடைல விருது வாங்குறோம்” என நெகிழ்ந்தார்.
Best Tech Channel – Tamil Tech!

2025-ம் ஆண்டில் சிறந்த டெக்னாலஜி சேனலுக்கான விருது தமிழ் டேக் சேனலுக்கு வழங்கப்பட்டது.
Viral Star Of The Year 2025 – Paal Dappa
2025-ம் ஆண்டின் டிஜிட்டல் வைரல் ஸ்டார் விருது ராப் சிங்கர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட பால் டப்பாவுக்கு வழங்கப்பட்டது.
இயக்குநர் மிஷ்கின் விருதை வழங்க, பால் டப்பா பெற்றுக் கொண்டார்.
“எனக்கு புடிச்சத பண்ணதால இப்போ இந்த விகடன் விருத புடிச்சுட்டு இருக்கேன்” – மைக்செட் ஸ்ரீராம்

அல்டிமேட் திறமையாளர் ஶ்ரீராமுக்கு Best Performer Male விருது வழங்கப்பட்டது. இயக்குநர் மிஷ்கின் விருது வழங்க, ஶ்ரீராம் அதைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீராம், “யூடியூப் சேனல் ஆரம்பிக்கும்போது ‘அதெல்லாம் வேலைக்கு ஆகாது’ என்றார்கள். ஆரம்பிச்சு நல்லா ஓரளவுக்குதான் போச்சு, அப்போ ‘ உன்னால அவ்வளவுதான் முடியும்’ என்றார்கள்.
நடிக்கும்போது ‘உனக்கு நடிப்பு வரல’ என்றார்கள். ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் முடியாது என்று பலர் சொன்னார்கள்.
ஆனால், எனக்குப் பிடிச்சத விடாமல் பண்ணிட்டே இருந்தேன். பிடிச்சத பண்ணதுனாலதான் இப்போ இந்த விகடன் விருத புடிச்சுட்டு இருக்கேன். So, என்ன ஆனாலும் புடிச்சத பண்ணுங்க” என்று கூறினார்.
Best Couple Celebrity Channel – ஹுசைன் – மணிமேகலை!

Best Couple Celebrity Channel-கான விருது ஹுசைன் – மணிமேகலை ஜோடிக்கு வழங்கப்பட்டது. நடிகர் கதிர் மற்றும் நடிகை திவ்யாபாரதி விருதை வழங்க ஹுசைன் – மணிமேகலை பெற்றுக்கொண்டனர்.
Most Celebrated Channel Of the Year – VJ Siddhu Vlogs

ஊர் சுற்றுவது மட்டுமின்றி, அதில் நண்பர்களுக்கும் சம இடம் கொடுப்பது, வழியில் எதிர்படும் எளிய மனிதர்களுக்கு நெகிழ்ச்சியான உதவிகளை வாரி வழங்குவது என எமோஷனல் ஏரியாவிலும் பயங்கர கெட்டிக்கார குழுவான VJ Siddhu Vlogs-க்கு Most Celebrated Channel Of the Year விருது வழங்கப்பட்டது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் வழங்க, தனது குழுவுடன் வி.ஜே. சித்து பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய வி.ஜே. சித்து, “ஒரு பக்கம் பட எடுப்பதற்கான வேலைகள், இன்னொரு பக்கம் யூடியூப் என விடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
மொத்தமாக 10, 15 வீடியோக்கள் எடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரிலீஸ் பண்றோம். பார்வையாளர்களை ஏமாற்றக் கூடாது.
அவர்களுக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் எப்போதும் இருக்கும்” என்று கூறினார்.
Best Performer Female – அர்ச்சனா குமார்

`அராத்தி’ சேனலைத் திறந்தால் ஒரு பக்கம் 90’ஸ் கிட்ஸின் துயரங்களில் பங்கெடுப்பவராகவும், இன்னொரு பக்கம் 2கே கிட்டாக மாறி அவர்களை வெறுப்பேற்றுபவராகவும், அடுத்த நொடி ஜென் Z-ஆக தள்ளி நின்று இரண்டு பூமர்களையும் கலாய்க்கவும் செய்பவராகவும் வரும் மெச்சூரிட்டியும் அட்ராசிட்டியும் கலந்த கலவை அர்ச்சனா குமாருக்கு Best Performer Female விருது வழங்கப்பட்டது.
விருதினை நடிகை நிவேதா பெத்துராஜ் வழங்க அர்ச்சனா குமார் பெற்றுக்கொண்டார்.
BEST CREATOR – SPECIAL MENTION Winner – Mallesh Kannan & S Balamurugan

`அசட்டுத் தனம்’ கலந்த நகைச்சுவையைக் கையாள்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் கலாய் மெட்டீரியல் ஆகிவிடும் ஆபத்திருக்கும் இந்த இரு முனைக் கத்தியைத் தயக்கமின்றி வீசி வெற்றி வாகை சூடியிருக்க்கும் மல்லேஷ் கண்ணன்-பாலமுருகன் இணைக்கு BEST CREATOR – SPECIAL MENTION விருது வழங்கப்பட்டது.
நடிகர் சாந்தனு விருதை வழங்க, மல்லேஷ் கண்ணன், பாலமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பேசிய மல்லேஷ் கண்ணன், பாலமுருகன், “”இது எங்களுக்கு முதல் மேடை. இதெல்லாம் எங்களுக்கு புதுசு.
முதல் இந்த செய்தி எங்களுக்கு வந்தபோது நாங்க நம்பல. விருது கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்த விருது எங்களுக்கு மிகவும் நெருக்கமானது.
மேலும் பல விஷயங்கள் செய்ய ஒரு motivation-ஆக இந்த விருது இருக்கிறது” என்று கூறினர்.
Best Solo Creator (Male) – RJ Deepak

பிராங்க் கால்களைக் கலகல வீடியோவாக தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பகிர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தன்வசமாக்கியிருக்கும் தீபக்கிற்கு Best Solo Creator – Male விருது வழங்கப்பட்டது.
Most Celebrated Hero in Digital – STR

விகடனின் Most Celebrated Hero in Digital விருது நடிகர் சிம்புவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் வெற்றிமாறன் வழங்க, சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் பெற்றுக் கொண்டார்.
விருதை பெற்றுக்கொண்டு பேசிய டி. ராஜேந்தர், “இந்த விருதை நீங்கள்தான் வாங்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி அனுப்பிய என் மகனுக்குத்தான் இந்த எல்லாப் புகழும்.
விகடன் டிஜிட்டல் டீமுக்கு நன்றி. விகடன் வாசகன் நான். என் வீட்டில் விகடன் வாங்க முடியாத அளவுக்கு ஏழ்மை. ஆனால். எந்த வீட்ல விகடன் இருக்கோ அங்க போய் வரிக்கு வரி படிப்பேன்.
ஒரு காலக்கட்டத்தில் விகடனோடு எனக்கு உடன்பாடு. சில காலகட்டத்தில் வந்திருக்கலாம் முரண்பாடு. அவர்கள் மூலம் வந்திருக்கலாம் இடர்பாடு. ஆனால், விருது வாங்க அழைத்திருக்கிறார்கள் அன்போடு. அதற்கேபிற்ப வந்திருக்கிறேன் தமிழ் பண்பாடு” என்று கூறினார்.
Best Automobile Channel – Bike Care 360 Tamil

Best Fiction Channel Winner – Madrasi
ரீல்ஸ், வீடியோஸ் எனக் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆட்டோ ஓட்டி மகிழ்விக்கும் இந்த மதராஸி சேனலுக்கு Best Fiction Channel விருது வழங்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருது வழங்க மதராஸி சேனல் குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பேசிய கலாட்டா குரு, “மதராஸியின் முதல் விருது. 2025-ல் விகடன் டிஜிட்டல் விருது வாங்குறேன். 2026-27ல் விகடன் ஓடிடி விருது வாங்குவேன். 2028-29ல் விகடன் சினிமா விருது வாங்குவேன்” என்று கூறினார்.
Best Finance Channel – பைனான்ஸ் வித் ஹரீஷ்!

பொருளாதார நிபுணர் நாகப்பன் கரங்களால் Best Finance Channel விருதை Finance with Harish சேனலின் ஹரீஷ் பெற்றுக்கொண்டார்.
“இந்த விருதை உள்ளூர் வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” – கிரிக்கானந்தா

இந்திய வீரர் சாய் கிஷோர் கரங்களால் Best Sports Channel விருது பெற்ற கிரிக்கானந்தா, “விகடன் வாசகரா இருந்த நான், விகடன் டிஜிட்டல் விருது வாங்கியிருக்கேன். 2025 நிறைய அதிசயங்களை கொடுத்திருக்கு. உள்ளூர் வீரர்கள், டெஸ்ட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று கூறினார்.
“இது எனக்கு மிகப்பெரிய சாதனை!” – Best Cooking சேனல் விருது வென்ற ஹேமா

Best Cooking Channel விருது `Home Cooking Tamil’ சேனலுக்கு வழங்கப்பட்டது. சௌமியா அன்புமணி விருது வழங்க ஹேமா பெற்றுக் கொண்டார். விருதை பெற்றுக்கொண்டு பேசிய ஹேமா, “15 வருஷமா இத பண்ணிட்டு இருக்கேன். இந்த விருது எனக்கு மிகப்பெரிய சாதனை” என்று ஹேமா கூறினார்.
`Best Kids Channel’ – முதல் விருதை வென்ற Billu Show!

சினிமா விருதுகள், அவள் விருதுகள், நம்பிக்கை விருதுகள் என ஆளுமைகளை வருடந்தோறும் விருது வழங்கி கௌரவப்படுத்திவரும் விகடன், அடுத்தகட்டமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக முதல் முறையாக, “விகடன் டிஜிட்டல் விருதுகள்” இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
விருது விழாவில்….















விகடன் டிஜிட்டல் விருது 2025 விழா இன்று பிற்பகல் 4 மணிக்கு (செப்டம்பர் 13-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.
நம் ஃபேவரைட் சோஷியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்த டிஜிட்டல் உலகையும் வகைப்படுத்தி மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த உற்சாக விழாவை வாசகர்களும் கண்டுகளிக்க வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கும்பொருட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்கும் வாசகர்களுக்கு முன்வரிசை முன்னுரிமை வழங்கும் விதமாக அறிவிப்பு வெளியானதிலிருந்து ஏராளமான வாசகர்கள் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளார்கள். கலைவாணர் அரங்கம் நோக்கி விருது பெற வரும் டிஜிட்டல் நாயகர்களை விகடன் வரவேற்றுக் கவுரவிக்க காத்திருக்கிறது.
விருது பெறுபவர்களின் விவரங்களை அறிய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…
https://www.vikatan.com/collection/vikatan-digital-awards-2025-winners-list