மும்பை,
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்த தொடரில் பாகிஸ்தான் தங்களது வழக்கமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை விட்டு விட்டு ஸ்பின்னர்கள் நிறைந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. குறிப்பாக அந்த அணியில் ஆல் ரவுண்டர்கள் உள்பட 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷாகின் அப்ரிடி மட்டுமே குறிப்பிடத்தக்க வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் பாகிஸ்தானின் ஸ்பின்னர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதனால் இம்முறை பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வது அவசியம் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பாகிஸ்தான் அணியின் இந்த பந்து வீச்சு கூட்டணியை நான் விரும்புகிறேன். ஏனெனில் இந்த பந்துவீச்சு தாக்குதல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏதோ வித்தியாசமான சிந்தனையை கொடுக்கலாம். அவர்கள் முன்பு உலக நிகழ்வுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியுள்ளனர். ஆனால் இம்முறை முற்றிலும் வேறுபட்ட பந்துவீச்சு கூட்டணி உள்ளது. இம்முறை அவர்களிடம் அதிகமாக வேகம் இல்லை. ஒருவேளை வாசிம் அக்ரம் இதை வெறுப்பார். எனவே நமது பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்.
ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பேட்டிங் சற்று மேம்பட வேண்டும். இருப்பினும் தம்மிடம் உள்ள வளங்களை பயன்படுத்தியதற்கு மைக் ஹெசனுக்கு பாராட்டுக்கள். சைம் ஆயூப் இதற்கு முன் பாகிஸ்தானுக்காக அதிகமாக பந்து வீசவில்லை. ஆனால் ஹெசனின் கீழ், அவர் கிட்டத்தட்ட 90 சதவீதம் பந்து வீசுகிறார். இது ஒரு புதிய அணுகுமுறையைக் காட்டுகிறது. பாகிஸ்தான் ஏதோ வித்தியாசமாக முயற்சிப்பது புதுமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது. அவர்களுடைய முதல் ஆறு அல்லது எட்டு ஓவர்களை கற்பனை செய்ய முடியுமா? வெறும் 2 ஓவர்கள் வேகப்பந்து, மற்ற அனைத்தும் ஸ்பின். ஆச்சரியமாக இருக்கிறது!” என்று கூறினார்.