சனா,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனால், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் ஏமன் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ராணுவ தலைமையகம், கியாஸ் நிலையம் போன்றவையும் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் கடந்த 10-ந்தேதி ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் உள்பட 46 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.